A/L technology stream

Sunday 18 March 2018

internet full notes


கணிப்பொறித் தகவல் பரிமாற்றம்

தொலை தூரத்துக்குச் செய்தியை அனுப்ப குரல் ஒசை பயன்படாது. அந்த சமயத்தில் , பறைகளைத் தட்டியும், புகையை மூட்டியும், குறிப்பிட்ட குறியீடுகள் மூலம் தகவல்களை அனுப்பினர் அக்காலத்து மக்கள். புறாக்கள், தபால், தந்தி, தொலைபேசி என வளர்ந்து, இக்காலத்தில் கணிப்பொறிகள் மூலம் தகவல்களை அனுப்பவும் யுகத்தில் தற்போது இருக்கிறோம்.

கணிப்பொறிகளுக்கு இடையேயான தொடர்பு, கம்பி, மைக்ரோ அலை, ரேடியோ அலை, அகச்சிவப்பு (Infra Red) அலை போன்று பலவற்றாலும் நிகழ்கிறது. மையக் கணிப்பொறி ஒன்றினை, தொலைவில் இருக்கும் ஒரு முனையத்துடன் இணைப்பது 1965 இல் நிகழ்ந்தது. இன்று, கணிப்பொறி வலையாக்கம் நம் அன்றாட வாழ்வின் ஒரு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

வலை (Network)

பல கணிப்பொறிகள், தாமிரக்கம்பி, ஒளிவடம், மைக்ரோ அலை, அகச்சிவப்பு அலை அல்லது செயற்கைக்கோள் வழியாக இணைக்கப்பட்டு, ஒரு வலை உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு கணிப்பொறியும் ஒரு முனையம் (node) எனப்படும். இருக்கும் வன்பொருள், மென்பொருள் வளங்களைப் (resource) பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வலை பயன்படுகிறது.

வலைக்கான முக்கிய காரணங்கள்                                                                               
* வளப் பகிர்வு :வலிமை மிக்க, அல்லது விலை அதிகமான வளத்தினை பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டு - விலை உயர்ந்த ஒரு அச்சுப்பொறியை அனைவரும் தங்கள் கணிப்பொறியில் இருந்து கொண்டே பயன்படுத்தலாம்.                                                                                                                                                       
  * தகவல் பகிர்வு : தகவலை ஒரு கணிப்பொறியில் வைத்திருந்தால் போதும். மற்ற கணிப்பொறிகள் இதிலிருந்து படித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கணிப்பொறியிலும் அதே தகவலை வைத்தால் இடம் வீணாகும். இதை தவிர்க்கலாம்.

* தகவல் தொடர்பு : ஒரு கணிப்பொறியிலிருந்து இன்னொரு கணிப்பொறிக்கு எளிதாகவும், விரைவாகவும் தகவலை அனுப்பலாம். எடுத்துக்காட்டாக, வெளியில் இருக்கும் ஒரு விற்பனையாளர், விற்பனை பற்றிய தகவலை, உடனடியாக, அலுவலகத்தில் இருக்கும் ஒரு கணிப்பொறிக்கு அனுப்பலாம். அதைக் கொண்டு, அங்குள்ள தகவல் தளங்களை உடனடியாக மாற்றி புத்தாக்கம் (update) செய்யலாம். தேவையான தகவல்களையும் வெளியில் இருந்தபடியே பெறலாம்.

வலையின் பயன்பாடுகள்                       
                                                                           கீழ்க்காணும் சூழல்களில்  வலை  பெரிதும் பயன்படுகிறது.
Ø  மின்னியல் வழித் தகவல் பரிமாற்றம்
Ø   தொலைக் கருத்தரங்கம் (tele Conference)
Ø  செல்லுலர் தொலைபேசி
Ø  கம்பித் தொலைக்காட்சி
Ø  பொருளாதாரச் சேவைகள், விற்பனை
Ø  விமானம், ரயில், சினிமா, பேருந்து போன்றவற்றிற்கு முன் பதிவு
Ø  தொலை வைத்தியம்
Ø  ஏடிஎம் (தானியங்கிப் பணப்பொறி ATM)
Ø  இணைய வங்கிச் சேவை                                                                                                      வணிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் இன்னும் பலவும் வலையின் பயனை உணரத் தொடங்கியுள்ளன. தங்கள் வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், திட்டப் பணிகளில் இணைந்து பணியாற்றுவதிலும் இவை பெரிதும் பயனளிக்கின்றன.
வலையின் பயன்கள்
·         சிறப்பான தனியார் தகவல் தொடர்பு.
·         முக்கிய தகவல்களையும், நிரல்களையும் பலரும் ஒரே சமயத்தில் அணுகுதல்.
·         முக்கியத் தகவல்களை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைத்தல்.
·         விலையுயர்ந்த வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல்.                               

 கணிப்பொறித் தகவல் தொடர்பு மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
           I.            அவை உருக்குலையாதது (safe) - அனுப்பிய தகவல்கள் சேதமில்லாமல் அப்படியே சென்றடைய வேண்டும்.
        II.             பாதுகாப்பானது (secure) - அனுப்பிய தகவல் மற்றவர் மாற்றியமைக்க முடியாதபடி பாதுகாப்பாகச் செல்ல வேண்டும்.
      III.            நம்பகமானது (reliable)- அனுப்பிய தகவல் சரியாகப் போய்ச் சேர்ந்ததா என்பது அனுப்பியவருக்கு உறுதி செய்யப்படவேண்டும்.

வலையின் வகைகள்                                                           இன்று மூவகை வலைகள் உள்ளன.
Ø  அகப்பாப்பு வலை (Local Area Network, LAN)
Ø  நகரப் பரப்பு வலை (Metropolitan Area Network, MAN)
Ø  பரந்த வலை (Wide Area Network, WAN)
ஒரு கட்டடம் அல்லது அருகில் இருக்கும் பல கட்டடங்களுக்குள் உள்ள கணிப்பொறிகளை இணைப்பது அகப்பரப்பு வலை. இவை பெரும்பாலும் தொலைபேசிக்கான கம்பிகளைப் பயன்படுத்தாது. தனிக் கம்பிகள் மூலம் அல்லது கம்பியில்லாமல் இணைக்கப்படும். முறுக்கிய இணைக் கம்பிகள் (twisted pass) , ஒருமையக் கம்பிகள் (coaxial cables) ஒளி இழை (optical fibre) போன்றவை இணைப்புகளாகப் பயன்படும். கம்பியில்லாத வகையில் அக்காதா, ரேடியோ அலைகள் பயன்படுகின்றன. இதனால் கையில் எடுத்துச் செல்லக்கூடிய கணிப்பொறிகள் எளிதாக வலையில் இணைகின்றன. கம்பியில்லா இணைப்பின் வேகம் சுற்றுக்குறைவு.                                                                                                                                 

       
                                                                                                                                 ஒரு வலையில் இரண்டிலிருந்து பல நூறு வரை கணிப்பொறிகள் இருக்கும். பொதுவாக அகப்பரப்பு வலையில், வன்பொருள், தரவுகள் மற்றும் மென்பொருள் பகிர்ந்து கொள்ளப்படும். தன்னிடமுள்ள வன்பொருளையும், மென்பொருளையும் மற்றவைகளுக்கு அளிக்கும் கணிப்பொறி, கோப்பு சேவையகம் (file Server) அல்லது வலைச் சேவைமையம் (network Server) என அழைக்கப்படும்.

ஒரு நகரத்தில் உள்ள பல கணிப்பொறிகள் இணைந்து உருவாவது நகரப் பரப்பு வலை [MAN).

உலகின் பல இடங்களிலும் உள்ள கணிப்பொறிகளால் உருவாவது பரந்த வலை (WAN). இதில் உள்ள கணிப்பொறிகள், கம்பி, ஒளி இழை, செயற்கைக்கோள் என பல வழிகளில் இணைக்கப்பட்டிருக்கும்.

வலையின் இணைப்பு அமைப்பு
வலையில் உள்ள கணிப்பொறி முனையம் [node) என்று அழைக்கப்படுகிறது. கணிப்பொறிகளை இணைக்கும் இணைப்பு அமைப்பு நெட்வொர்க் டோபாலஜி (network topology) எனப்படும். இந்த இணைப்பு அமைப்பினை முடிவு செய்யப் பல காரணங்கள் உள்ளன. முனையத்தின் தன்மை, தேவையான திறன், பயன்படுத்தப்படும் கம்பிகளின் தன்மை, வலை போன்ற பலவற்றைப் பொருத்தது.

வலையின் இணைப்பு அமைப்பு பலவகைப்படும். நட்சத்திரம், வளையம், பாட்டை, கலப்பினம், ஃபிட்டி [FDDI) என்பவை சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நட்சத்திர வலை (Star Network)
இதன் மையத்தில் கோப்பு சேவையகம் இருக்கும். இதனுடன் மற்ற கணிப்பொறிகள் காக்கப்படாத, முறுக்கப்பட்ட இணைக் கம்பிகளால் (Unshielded twisted pair- UTP) இணைக்கப்பட்டிருக்கும்

வளைய வலை (Ring network)
இந்த வகையில், கணிப்பொறிகளும், மற்ற கருவிகளும் ஒரு வளைய வடிவில் இணைக்கப்பட்டிருக்கும்  இதில் தகவல்கள் ஒரே திசையில் செல்லும். ஒரு கணிப்பொறி தனக்கான தகவலைப் பார்த்ததும் அதை எடுத்துக்கொள்ளும். தனக்கு இல்லை என்றால் அப்படியே அடுத்த முனையத்திற்கு அனுப்பிவிடும். இங்கு எல்லா கணிப்பொறிகளுமே சமம். சேவையகம் என்று எதுவும் கிடையாது.

பாட்டை வலை (Bus network)
இங்கு பாட்டை (Bus) எனப்படும் ஒரு பொதுவான கம்பித்தொகுதி இருக்கும் இதனுடன் கணிப்பொறிகள் மற்றும் பல தகவல் சாதனங்களும் இணைந்திருக்கும். இதிலும் சேவையகம் என எதுவும் இல்லை . இதில் எதிலிருந்தும் எதற்கும் தகவல் செல்ல முடியும்.

கலப்பின வலை (Hybrid network)
மேலே பார்த்த மூன்று வகைகளையும், தேவைக்கேற்றது போல் இணைத்து உருவாக்கவது கலப்பின வலை எனப்படும்.

ஃபிட்டி வலை(FDDI network)
இது Fiber Distributed Data Interface என்பதன் குறுக்கம். இது வேகம் மிகுந்தது. அதனால் விலையும் அதிகம். அதிக அளவுத் தரவுகளை, துல்லியமான படங்கள், ஒளி ஒலிக் காட்சிகள் போன்றவற்றை விரைவாக அனுப்ப இது உதவுகிறது.

வலையின் அடிப்படைப் பகுதிகள்
வலையின் அடிப்படை  மூன்று முக்கிய பகுதிகளைக் கூறலாம்.
 1. வலைச் சேவை (Network Services)
தேவைக்கேற்றபடி சேவைகளை அளிக்கவல்லதாக இருக்க வேன்டும். அதற்கான வன்பொருள், மென்பொருள் மற்றும் தகவல்கள் இருக்கவேண்டும்.
2 பரிமாற்ற ஊடகம் (Transmission media)
இது கணிப்பொறிகளை இணைக்கும் கம்பி, கம்பியில்லா சாதனங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. இதன் வழியேதான் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறது.
3. தொடர்பு விதிமுறைகள் (Protocols)
 தொடர்பு விதிமுறைகள் என்பது ஒன்று அல்லது பல விதிமுறைகளும், செந்தரங்களும் அடங்கிய தொகுதி. இந்த விதிகளின் அடிப்படையில்தான் தகவல் பரிமாற்றம் குழப்பமின்றி நடைபெறுகிறது.

பொதுவான வலைச்சேவைகள்(Common Network Services)
வலைச்சேவைகளில் பொதுவாகப் பலரும் பயன்படுத்தும் சேவைகளை இங்கு பார்ப்போம்.
A.      கோப்புச் சேவைகள்-வலையில் கோப்புகளைப் பராமரிக்க உதவும் சில சேவைகளைப் பார்க்கலாம். இவை கோப்புளைத் திறம்பட நிர்வகிக்க உதவுகின்றன. கோப்புப் பரிமாற்றம் - கோப்பின் அளவு, தூரம், இருக்கும் இயக்க முறை என்பவை எப்படி இருந்தாலும், விரைவாகக் கோப்புகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப வேண்டும்.
B.      தேக்கமும் மாற்றமும்- சில கோப்புகளை பலரும் ஒரே சமயத்தில் அணுகுவார்கள். சில நாட்களில் அந்தக் கோப்பின் பயன்பாடு குறைந்து, மிகச் சிலரே அணுகுவார்கள். எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழகம் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடும்போது, ஒரு சில மணி நேரத்தில் எல்லோரும் பார்த்துவிட முயற்சிப்பார்கள். அதன் பயன் முடிந்தவுடன், அந்தக் கோப்புகளை இரண்டாம் நிலை நினைவகமாக வன் வட்டில் இருந்து எடுத்து, விலை குறைந்த , ஒளிவட்டு போன்ற இன்னொரு நினைவகத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும்.
C.      கோப்புப் புத்தாக்கம் - ஒரு கோப்பின் படிகள் பல இடங்களில் இருக்கும். மூலத்தில் செய்யப்படும் மாற்றங்களின் நேரங்கள் குறித்து வைக்கப்படும். இதைக் கொண்டு, மற்ற எல்லா இடங்களிலும் உள்ள கோப்புகள் புத்தாக்கம் செய்யப்படும்.
D.       கோப்பு நிலையாக்கம் (File archiving) - பாதுகாப்புக்காக ஒரு கோப்பின் படிகள் வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும். கோப்பு சேதமடைந்தால், இந்தப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளில் இருந்து படி எடுத்து, தேவையான கோப்பினை சரியான நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.

அச்சு சேவைகள்                                                             ஒரு வலையில் அச்சுப்பொறி நிறுவப்பட்டிருந்தால், அதனால் பல நன்மைகள் உண்டு.
பலரும் அணுகலாம் - வலையில் இருக்கும் எந்தக் கணிப்பொறியிலிருந்தும் ஒரு அச்சுப் பொறியை அணுகலாம். இதனால் தேவையான அச்சுப் பொறிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
தூரம் ஒரு தடையல்ல - ஒரு இடத்தில் இருந்துக்கொண்டே, வேறொரு இடத்தில் இருக்கும் அச்சுப்பொறியில் அச்சிடலாம்.
ஒரே சமயத்தில் பலரும் அச்சிடலாம் - வரும் பணிகள், வரிசையில் வைக்கப்பட்டு ஒவ்வொன்றாக அச்சிடப்படும். இதனால் அச்சுப் பொறியின் நேரம் விரையமாகாது. விலை உயர்ந்த அச்சுப்பொறியைப் பகிர்ந்து கொள்ளலாம் - வேகம் அதிகமானது, சிறப்பாகச் செயல்படுவது, பெரிய அளவில் அச்சிடுவது போன்றவற்றுக்கான அச்சுப்பொறிகள் விலை அதிகமானவை. இவற்றில் ஒன்று இருந்தாலே எல்லோரும் அதன் சேவையைப் பெறலாம்.

தகவல் பரிமாற்ற வகைகள்
இதில் இரு வகைகள் உள்ளன.
1. ஒப்புமை வகை
2. இயக்க வகை
ஒப்புமை வகையில் தரவுகள் தொடர்ந்து மாறும் மதிப்புகளைக் கொண்டவை. எடுத்துக்காட்டாக தொலைபேசியைக் கூறலாம். இதில் செல்லும் மின்சாரத்தின் அளவு (வோல்ட்டேஜ்) தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும்.
கணிப்பொறிகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்திற்கு இலக்க வகைதான் பெரிதும் பயன்படுகிறது. இதில் மின்சாரம் இருக்கிறது (on). இல்லை (off) என்ற இரு நிலைகள் , 0, 1 என்ற இலக்கங்களைக் குறிக்கிறது. இவை மின்சாரத் துடிப்புகளாக, படம் 6.6 இல் உள்ளதுபோல். அனுப்பப்படுகின்றன. இலக்க வகைத் தகவல் பரிமாற்றம், ஒப்புமை வகையை விடத் தரத்தில் உயர்ந்ததும், வேகமானதும் ஆகும்.
மோடம் (Modem)
தொலைபேசியில் தகவல்கள் ஒப்புமை வகையில் அனுப்பப்படுகின்றன. பேச்சு ஒலி, மின்சார அலையாக மாற்றப்பட்டு பெரும்பாலும் கம்பிகள் வழியாக அனுப்பப்படுகிறது. அடுத்த முனையில் இந்த அலை மீண்டும் ஒலி அலையாக மாற்றப்படுகிறது. இந்த ஒலித்தகவல் பரிமாற்றத்தில் சிறிது மாற்றங்கள், தவறுகள் நேர்ந்தாலும் பரவாயில்லை. நம்மால் பொறுத்துக் கொள்ள முடியும்.
இலக்க வகைத் தகவல்கள் தொலைபேசிவழியாகவும் இப்போது வருவதைப் பார்த்திருப்பீர்கள். இந்த இலக்க வகைத் தகவல்களை ஒப்புமை நிலைக்கு மாற்றித்தான் தொலைபேசி வழியாக அனுப்ப முடியும். அடுத்த முனையில், ஒப்புமை நிலையில் இருந்து, இலக்க நிலைக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாற்றப்பட்ட தகவல்களை அங்குள்ள கணிப்பொறி பெற்றுக் கொள்கிறது. இந்த இருவகை மாற்றங்களையும் செய்யும் ஒரு சிறு பொறி கணிப்பொறிக்கும், தொலைபேசிக்கும் இடையில் இருக்கும். அதன் பெயர் மோடம் (MODEM-Modulator, demodulator) 
                                                                                                                                                               மோடத்தின் பணியை விரிவாக்கி, அதுவே அடுத்த முனையத்திற்கு தொலைபேசி எண்ணைச் சுழற்றுதல், வரும் அழைப்புகளுக்கு பதில் கூறுதல் போன்ற செயல்களையும் செய்யும்படிக் கூறலாம். அத்தகைய மோடம் ஒரு புத்திசாலி மோடம் எனப்படுகிறது.

தகவல் செலுத்து வேகம்
ஒரு வடத்தின் வழியாக எந்த வேகத்தில் இலக்க வகைத் தகவல் செல்கிறது என்பது ஒரு வினாடியில் இத்தனை பிட்டுகள் (Bits per second) என்று கூறப்படுகிறது. இது தகவல் செலுத்து வேகம் எனப்படும்.
 தகவல் பரிமாற்ற வகை
இதில் மூன்று வகைகள் உள்ளன
A.      ஒருவழி வகை
B.       அரை இருவழி வகை
C.      முழு இருவழி வகை

ஒருவழி வகை (simplex mode)
இதில் தடத்தின் ஒரு முனையில் தகவலை அனுப்ப மட்டும் முடியும். மறுமுனையில் பெற மட்டும் முடியும். இதனால் தகவல் ஒரு திசையில் மட்டுமே செல்லும். எதிர்த்திசையில் செல்லாது. தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு இந்த வகையைச் சேர்ந்தவை. ஒலி / ஒளிபரப்பு நிலையங்கள், தகவலை அனுப்ப மட்டும் செய்யும். வானொலி ! தொலைக்காட்சிப் பெட்டி தகவலைப் பெறும். ஆனால் திரும்ப அனுப்ப முடியாது. வானொலி நிலையத்தில், வானொலிப் பெட்டியில் இருந்து பதில் எதுவும் பெற முடியாது.இந்த வகையில் தகவல்கள் ஒரு வழியில் மட்டுமே செல்கின்றன.

அரை இருவழி வகை (Half Duplex mode )
இதில் இரு முனைகளும் தகவலை அனுப்பவும், பெறவும் முடியும். ஆனால் ஒரு சமயத்தில், ஒருவர் அனுப்பும்போது, மற்றவர் கேட்க வேண்டும். இருவரும் ஒரே சமயத்தில் தகவலை அனுப்ப முடியாது. மாற்றி மாற்றி அனுப்பலாம். இது ஒரு வாகன அகலம் உள்ள பாலம் போன்றது.ஒரு சமயத்தில் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு ஒரு வாகனம் மட்டுமே செல்லலாம். வாக்கி டாக்கி எனப்படும். சாதனத்தை காவல்துறையினர் பயன்படுத்துவதைப் பார்த்திருப்பீர்கள். அது இந்த வகைதான்.

முழு இருவழி வகை (Full Duplex mode)
இதில் இருமுனைகளும், ஒரே சமயத்தில் செய்தியை அனுப்பவும் முடியும், பெறவும் முடியும். தொலைபேசி இந்த வகையைச் சேர்ந்தது. அகலமான பாலத்தில் ஒரே சமயத்தில் போக்குவரத்து இரு வழிகளிலும் நடைபெறுவதைப் போல.
பெரிய கணிப்பொறிகளில் இந்த வகை செயல்படுத்தப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் நெட் மீட்டிங் என்னும் மென்பொருள் முழு இருவழி வகையில் செயல்படுகிறது.
இணையம் (Internet)
அகில உலக அளவில், சிறிதும் பெரிதுமான, பல கணிப்பொறிகள் இணைவதால் உருவானது இணையம். சுமார் 200 நாடுகளில் இருந்து, 50 மில்லியனுக்கும் மேற்பட்ட கணிப்பொறிகளைக் கொண்டது இது. இணையத்தில் இணைந்த கணிப்பொறிகளில் இருந்து தேவையான தகவல்களைப் பெற முடியும். இணையத்தைப் பயன்படுத்துவோரில் சிலர்
மாணவர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர், நிறுவனங்களும், அவற்றின் பணியாளர்களும்,அரசுப் பணியாளர்.

இணையத்தில் இணைந்த ஒரு கணிப்பொறி சேவையகம் (host) எனப்படும். இணையத்தில் ஒவ்வொரு கணிப்பொறிக்கும் ஒரு முகவரி உண்டு. அதைக் கொண்டுதான், அந்தக் கணிப்பொறிக்குத் தகவல் செல்லும். இந்த முகவரியை எண்களின் தொகுப்பாக அல்லது சொற்களின் தொகுப்பாகக் கொடுக்கலாம். இணையத்தில் தகவல் அனுப்ப உதவும் நெறிமுறை இன்டர்நெட் புரோட்டோகால் (Internet protocol -IP) எனப்படும்.
தகவல் பரிமாற்ற நெறிமுறை

 இணையத்தில் தகவல் பரிமாற்றம் பொட்டல மாற்றம் (Packet Switching) என்னும் முறையில் நடக்கிறது. இதில், அனுப்ப வேண்டிய தகவல் பல சிறு பொட்டலங்களாக மாற்றப்படுகிறது. ஒவ்வொன்றிலும், போக வேண்டிய முகவரி, பொட்டல வரிசை எண் போன்றவை இருக்கும். பொட்டலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்படும். இவை எல்லாம் ஒரே பாதையில் செல்ல வேண்டிய அவசியமில்லை. கிடைக்கும் வழியில் சென்று, கொடுத்த முகவரி உள்ள கணிப்பொறியைச் சென்றடையும்.                                                                                                                                               வந்திருக்கும் எல்லாப் பொட்டலங்களையும் வரிசைப்படுத்தி, அவற்றிலிருந்து தகவல்களை எடுத்து, ஒரு முழுத் தகவலாக மாற்றிக் கொள்ளும்.
இந்த பொட்டல் மாற்று வழியில், டீசீப், ஐபி என இரு நெறிமுறைகள் உள்ளன. இதில்
வசிப்பி (TCP. Transmission Control Protocol)
என்பது தகவல்களைப் பொட்டலங்களைப் பிரிப்பது, தேவையான இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததை உறுதி செய்வது போன்றவற்றைச் செய்யும்.

ஐபி(IP- Internet Protocol)
என்பது பொட்டலங்கள் எவ்வாறு ஒரு கணிப்பொறியிலிருந்து இன்னொரு கணிப்பொறிக்கு அனுப்பப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கும் நெறிமுறைகள் அடங்கியது
இணையத்தை நிர்வகிப்பது யார்?
இணையத்திற்கு ஒரு தனிப்பட்ட நிர்வாக அமைப்பு இல்லை. இன்டர்நெட் சொசைட்டி என்பது பல நிறுவனங்களும் அங்கம் வகிக்கும் ஒரு நிறுவனம். இது இணையத்தில் தகவல்களை திறம்பட பரிமாற்றம் செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஐகான் (ICANIN- International Corporation for Assigned Names and Numbers) என்னும் நிறுவனம் இணைய முகவரிப் பதிவை நிர்வகிக்கிறது. இது, ஒரே பெயர் இருவருக்குக் கொடுக்காமல் உறுதி செய்கிறது.

இணையத்தின் எதிர்காலம்
20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய இணையம் மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால்,
புது நெறிமுறைகள் உருவாகும் ;
பன்னாட்டுத் தொடர்புகள் பெருகும் ;
ஆராய்ச்சி, தொழில்நுட்பத்தில் தகவல் பரிமாற்றம் அதிகரிக்கும்

இணையத்தின் பயன்கள்                                                                           இணையத்தின் சில முக்கியப் பயன்பாடுகளை இனி பார்ப்போம்.

உலகளாவிய வலை (World Wide Web)
இதை இணையத்தின் பல்ஊடகப் பகுதி எனலாம். இதில் உலகத்தின் பல சேவையகங்கள் இணைந்துள்ளன. இவை பல் ஊடகத் தகவல்களை தேக்கி வைத்து, கேட்போருக்குத் தரும். பல் ஊடகத் தகவல் என்பதில், உரை, ஒலி, படங்கள் மற்றும் நகரும் படங்கள் எனப் பல வகைகள் அடங்கும்.
இதில், பல கோடிப் பக்கங்கள் உள்ளன. இவை வலைப் பக்கங்கள் (web pages) எனப்படும். பல தொடர்புடைய பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஒரு சேவையகத்தில் வைக்கப்பட்டிருக்கும். அது ஒரு வலைத்தளம் (website) எனப்படும். இந்தத் தொகுப்பின் முகப்புப் பக்கம், இல்லப்பக்கம் (home page) எனப்படும்.
 இந்த இல்லப் பக்கத்தில் அந்த வலைத்தளம் பற்றிய தகவல்கள் இருக்கும். மேலும், இதன் மற்ற பக்கங்களுக்குச் செல்ல, பல தொடர்பு வாயில்களும் இருக்கும்.

ஒவ்வொரு வலைத்தளத்திற்கும் ஒரு தனி முகவரி உண்டு. இது யூஆர்எல் (URL- Uniform Resource Locator) என அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

http://www.country-watch.com/Srilanka

என்பது ஒரு யூஆர்எல். இங்கு http என்பது (Hypertext Transfer Protocol (HTTP) என்பதன் குறுக்கம். WWW என்பது WWorld Wide Web என்பதன் குறுக்கம்.
அடுத்த பகுதியான Country_watch.com என்பது ஒரு வலையகத்தின் பெயர். இதை அடுத்து ஒரு சாய்வுக்கோடும், அடுத்து அந்த வலையகத்தில் ஒரு உறையின் பாதையும், தேவையான கோப்பின் பெயரும் இருக்கும்.

வலையில் உள்ள பக்கங்களைப் பார்ப்பது, உலவுதல் (BrOWSing) எனப்படும். இதற்கு உதவும் மென்பொருள் உலவி (Browser) எனப்படும். இது, தகவல் தளங்களில் இருந்து ஹெச்டிஎம்எல் பக்கங்களைப் பெற்று, அவற்றைத் திரையில் காண்பிக்கின்றன. இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் (Internet Explorer) மற்றும் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் (Netscape Navigator) என்பவை அதிகம் பயன்படும் உலவிகள்.

ஹெச்டிஎம்எல் பக்கங்களில் மற்ற பக்கங்களுக்குச் செல்வதற்கான இணைப்புகள் பல இருக்கும். சில சொற்களுக்காக அல்லது படங்களுக்காக இந்த இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும். இந்தச் சொற்கள் தனி வண்ணத்தில் அல்லது அடிக்கோடிட்டுக் காண்பிக்கப்படும். இதன் மீது இடம் சுட்டியைக் கொண்டு சென்றால் அது ஒரு கை போன்று மாறும். அந்த இடத்தில் ஒரு மிகை இணைப்பு (Hyper link) இருப்பதை இது குறிக்கிறது. அந்த இடத்தில் கிளிக் செய்தால் போதும். உலவியானது அந்த யூஆர்எல் குறிப்பிடும் வலைப் பக்கத்தைக் கேட்டு வாங்கி, திரையில் காட்டும்.
இதுதான் உலகளாவிய வலையின் மிக முக்கிய அம்சம். ஒரு சில கிளிக்குகளில் உலகின் பல முனைகளிலும் இருக்கும் பல செய்திகள், ஒருவருடைய திரையில் தோன்றும் இவை இருக்கும் இடம், அணுகும் முறை என்ற எதுவும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டியதில்லை !
மின்ன ஞ்சல்(Email)
இணையம் பிரபலமானதன் காரணங்களில் ஒன்று மின்னஞ்சல். இதன் மூலம் உரைகளையும். தரவுக் கோப்புகளையும் எளிதில், விரைவாகப் பரிமாறிக் கொள்ளலாம். இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி தபால்பெட்டி முகவரி இருக்கும். இந்த முகவரி உள்ள எவருக்கும், யார் வேண்டுமானாலும் செய்திகளை அனுப்பலாம். இவை அவருடைய அஞ்சல் பெட்டியில் சென்று சேரும். அவர் தன் அஞ்சல் பெட்டியைத் திறந்து, அதில் உள்ள செய்தியைப் பார்க்கலாம். சாதாரணமாக அஞ்சலில் உள்ள தன்மைகள், செய்தி சென்றடைந்ததைக் கூறுதல், மறுமொழி அனுப்புதல் போன்றவை மின்னஞ்சலிலும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

யூஸ்நெட் செய்திக்குழுக்கள் (Usenet News Groups)
இது குறிப்பிட்ட தலைப்புகளில் உரையாடும் மின் உரையாடல் குழுக்கள், யூஸ்நெட் என்பது ser Network என்பதன் சுருக்கம். குறிப்பிட்ட தலைப்பில் பல செய்திகள் இதில் வெளியிடப்படும். அஞ்சல்குழு (Mailing List)
இது மின்னஞ்சல் அடிப்படையில் செயல்படும் குழு. இந்தக் குழுவுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல் தானாகவே அக்குழுவின் எல்லா உறுப்பினர்களுக்கும் சென்று சேரும்.

 (FTP)
File Transfer Protocol என்பதன் சுருக்கம் இது. இதைப் பயன்படுத்தி, ஒரு கணிப்பொறியிலிருந்து இன்னொரு கணிப்பொறிக்கு கோப்புகளை மாற்றலாம். இந்தக் கோப்புகளில், விளையாட்டு, படங்கள், மென்பொருள், இசை என எதுவும் இருக்கலாம்.

 டெல்நெட் (Telnet)
இந்த நெறிமுறை நம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு கணிப்பொறியைத் தொடர்பு கொள்ள உதவுகிறது. இது ஒரு நுண் கணிப்பொறி ஒரு முதன்மைக் கணிப்பொறியுடன் இணைப்பு ஏற்படுத்தப் பயன்படுகிறது.

வலையின் பரவலான பயன்பாடுகள்

ஆராய்ச்சி-ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான செய்திகளை, நூலகம், ஆராய்ச்சி நிறுவனம், என்சைக்ளோபீடியா, தினசரிகள் போன்றவற்றிலிருந்து பெறலாம். எடுத்துக்காட்டாக, இந்த வலையகங்களைக் கூறலாம்.
WWW.Encart3.com
www.ipl.com (Internet Public Library)
www.loc.gov (Library of Congress)

 
உரையாடல் (chatting)-இருவர் அல்லது பலர் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள உதவும் வலையகங்கள் பல உள்ளன. இலவசங்கள் (Freeware)
சில இணையத் தளங்களில் இலவசமாகப் படியெடுக்கக்கூடிய பல வித மென்பொருள்கள், உரைக்கோவைகள் முதலிய கிடைக்கும்.

இணைய வழிக்கல்வி-பல கல்வி நிறுவனங்கள் தங்கள் படிப்புகளின் பாடங்களை இணையத்தில் வைத்திருக்கும். இவற்றை மாணவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பார்த்துப் படிப்பார்கள். வரும் சந்தேகங்களுக்கும், இணைய வழியிலேயே விடையும் கிடைக்கும்.                                                                                                          

இணைய வழி சேவைகள்-பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்தல், பொருள்களின் விலையைப் பார்த்து அவற்றை வாங்குதல், வங்கிக் கணக்கை நிர்வகித்தல், பங்குச்சந்தையில் வாங்குவதும், விற்பதும் போன்ற பலவித சேவைகள் இன்று இணையம் மூலம் நடைபெறத் தொடங்கியுள்ளன.
                                                                                                                             வேலை தேடல்-வேலை தேடித்தரும் நிறுவனங்களில், இணையத்தில் ஒருவரைப் பற்றிய தகவல்கள் வைக்கப்படுகின்றன. வேலை தரும் நிறுவனங்கள் இவற்றைப் பார்த்து, தேவையான துறையில் தகுதி பெற்றவர்களை அணுகி வேலை தருகின்றன. குறிப்பிட்ட துறைக்கு மட்டும் என்று செயல்படும் நிறுவனங்களும் உள்ளன. பல நிறுவனங்கள் இந்தச் சேவைக்கு வேலை தேடுபவர்களிடம் பணம் பெறுவதில்லை . சில நிறுவனங்கள் பணம் பெறுவதும் உண்டு.

உள் வலை, வெளிவலை (Intranet, Extranet )
ஒரு நிறுவனத்தில் பல கணிப்பொறிகள், பல இடங்களில் இருக்கலாம். அந்தக் கணிப்பொறிகளில் உள்ள தகவல்களையும், மற்ற வளங்களையும், அந்த நிறுவனங்களில் உள்ள பலரும் பகிர்ந்து கொள்ளலாம். இதற்காக, இணையத்தைப் போலவே டீசிபி ஐபியைப் பயன்படுத்தி ஒரு வலை அமைக்கப்படுகிறது. இதில் வெளியார் எவரும் பங்கேற்க முடியாது என்பதால், நிறுவனத்தின் தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன. இது உள்வலை (Intranet) எனப்படும். இணையத்தில் இருப்பது போலவே இதிலும் மின்னஞ்சல், அரட்டை அரங்கம், எஃப்-பீ, வலைப்பக்கம் என எல்லா வசதிகளும் உண்டு.

உள்வலையைச் சற்று விரிவுப்படுத்தி, ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர், மொத்த விற்பனையாளர், பகுதிகளைச் செய்து கொடுப்போர் போன்றவர்கள் வலையில் தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பெறலாம் என்ற அமைப்பு வெளிவலை (Extranet) எனப்படுகிறது. இதில் குறிப்பிட்ட வெளியாட்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள். இந்த அமைப்பினால் தொலைபேசிச் செலவு அதிக அளவில் மிச்சமாகும்.
பயிற்சிகள்                                                                                                                         கீழ்க்காணும் குறு வினாக்களுக்கு விடையளிக்கவும்
1. வலையாக்கத்திற்கான காரணங்கள் யாவை?
 2 கணிப்பொறி வலை பயன்படும் சில இடங்களை கூறுக.
3. கணிப்பொறித் தகவல் பரிமாற்றத்திற்கு                                         தேவையானவை                                                       எவை?

4. இன்றைய வலைகளின் வகைகள் எவை?
5. வேன் (WAN) என்பதை விளக்குக
6. தகவல் எந்த விதங்களில் அனுப்பப்படுகின்றது ?
 7. தகவல் பரிமாற்றத்தில் உள்ள வகைகள் என்ன?
 8. டீசீப் (TCP) என்றால் என்ன?
9. ஐகானின் (ICANN) செயல்பாடு என்ன?
10. யூஆர்எல் (URL) என்றால் என்ன?

No comments:

Post a Comment